

சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். இதுவரை மொழிப்பாடங்கள் உள்பட 4 தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், நாளை (செவ்வாய்கிழமை) கணிதம், உயிரியல், வணிகவியல், நுண் உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. அடுத்து 23 (திங்கட்கிழமை) மற்றும் 26-ந்தேதிகளில் (வியாழக்கிழமை) தேர்வுகள் நடக்கிறது. அத்துடன் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைகின்றன.
அதனைத் தொடர்ந்து, பொதுத்தேர்வு விடைத்தாள்கள் வரும் 28-ந்தேதி மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளன. பின்னர், அங்கிருந்து விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு ஏப்ரல் 4-ந்தேதி அனுப்பிவைக்கப்படுகின்றன.
முதன்மை தேர்வாளர்கள் ஏப்ரல் 8-ந்தேதி விடைத்தாள்களை மதிப்பீடு செய்வார்கள். உதவி தேர்வாளர்கள், ஏப்ரல் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.