போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற 751 மருத்துவர்களுக்கு நியமன ஆணை எங்கே? - அன்புமணி கேள்வி

நியமன ஆணை வழங்கப்பட்டுள்ள 320 பேருக்கும் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டன என்பது தெரியவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு 1,100 மருத்துவர்களை நியமிக்க நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 320 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், 1,071 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அப்பட்டமான பொய்யை அரசு கூறியிருக்கிறது. மருத்துவர்கள் நியமனத்தில் மோசடிகளை அரங்கேற்றி 751 மருத்துவர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அரசு மருத்துவமனைகளுக்கு 1,100 உதவி மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் நாள் வெளியிட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஜனவரி 25-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற 1,929 பேருக்கு கடந்த பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அவர்களில் அனைத்துச் சான்றிதழ்களையும் தாக்கல் செய்த 1,071 பேர் அரசு உதவி மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். உரிய சான்றிதழ்களை தாக்கல் செய்யாத 51 பேரின் தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை தாக்கல் செய்த பின்னர் அவர்களும் மருத்துவர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்த மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம், முதல் கட்டமாக 1,071 பேருக்கு கடந்த 13-ம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தி, நியமன ஆணை வழங்கப்படும் என்று அறிவித்தது.

Also Read
சிலிண்டர் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறிய அம்மா உணவகங்கள்
கோப்புப்படம்

ஆனால், 1,071 பேருக்கும் கலந்தாய்வு நடத்தாத திமுக அரசு, 13-ம் தேதி 100 பேருக்கும், 14-ம் தேதி 220 பேருக்கும் மட்டும் கலந்தாய்வு நடத்தி அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியது. மீதமுள்ள 751 பேருக்கும் கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்பது மட்டுமின்றி, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படாது என்றும், எதிர்காலத்தில் மருத்துவர் பணியிடங்கள் காலியானால், அப்போது அந்த இடங்களுக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.

நவம்பர் 21-ம் தேதி மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையில், காலியிடங்கள் எண்ணிக்கை 1,100 என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பித் தான் இந்தப் பணிக்கு 25,172 பேர் விண்ணப்பித்து, அவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றனர். அவர்களில் பலர் மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகளையும் துறந்து விட்டு அரசு உதவி மருத்துவர் பணியில் சேர ஆர்வமாக இருந்த நிலையில், அந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 751 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க திமுக அரசு மறுத்திருக்கிறது. நவம்பர் மாதம் காலியாக இருந்த 1,100 மருத்துவர் பணியிடங்களில் 750-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அதற்குள் எங்கு காணாமல் போய்விட்டன? அரசு உதவி மருத்துவர் பணி கிடைக்கும் என்ற நிலையில் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து, 1,071 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், 320 பேருக்கு மட்டும் நியமன ஆணை வழங்கி விட்டு, மற்றவர்களுக்கு பணி வழங்க மறுப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த துரோகத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் சாபம் திமுகவை சும்மா விடாது.

Also Read
ஒடிசா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு
கோப்புப்படம்

அரசு மருத்துவர் பணிக்கு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ள 320 பேருக்கும் எந்த அடிப்படையில் அவை வழங்கப்பட்டன என்பதும் தெரியவில்லை. இந்த நடைமுறையில் எந்த வெளிப்படைத்தன்மையும் கடைபிடிக்கப்படவில்லை. இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ள 320 பேரும் பொதுப்போட்டிப் பிரிவைச் சேர்ந்தவர்களா? அல்லது பொதுப்போட்டிப் பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளில் இருந்து இட ஒதுக்கீட்டு விகிதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களா? என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

பணியிடத் தேர்வு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் இன்று வரை வெளியிடப்படவில்லை; அவர்களில் ஒருவருக்குக் கூட கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை; மாறாக, 320 பேருக்கும் அவர்களின் கலந்தாய்வுக்கான முதல் நாள் தான் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. நியமன ஆணை வழங்குவதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல், பொதுப்போட்டிப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஆணை வழங்கப்பட்டிருந்தால் அதை விட கொடூரமான சமூகநீதி படுகொலை இருக்க முடியாது.

Also Read
தமிழகத்தில் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி - அமைச்சர் பெரியசாமி
கோப்புப்படம்

அரசு உதவி மருத்துவராக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட 320 பேரின் பெயர்கள், இட ஒதுக்கீட்டுப் பிரிவு, தரவரிசை உள்ளிட்ட விவரங்களை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மீதமுள்ள 751 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும். இதை செய்ய திமுக அரசு தவறினால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்; தகுதியுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com