

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் (தூத்துக்குடி வளாகம்) வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வாக்கு எண்ணும் அறைகளில் செய்யப்பட்டுள்ள மேஜை மற்றும் இருக்கை வசதிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கான வழித்தடங்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையற்ற மின்சாரம் மற்றும் இணையதள வசதிகள் ஆகியவை குறித்து கலெக்டர், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்கனவே 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சூழலில், நேற்று ஆய்வின் போது பணிகளை திட்டமிட்டபடி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது வருவாய்த் துறை மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.