தூத்துக்குடி: கடன் தொல்லையால் விஷம் குடித்த அக்கா, தம்பி உயிரிழப்பு

கோவில்பட்டியைச் சேர்ந்த 2 அக்காக்கள், தம்பி என 3 பேரும் கடன் தொல்லையால் ஊரை விட்டு வந்து, பொள்ளாச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூரைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 35), அவரது சகோதரிகள் முத்துலட்சுமி(45), மீனாட்சி(36) ஆகியோர் குறைந்த வட்டியில் பணம் வாங்கி அதிக வட்டிக்குக் கொடுத்தும், சீட்டு நடத்தியும் வந்த நிலையில், பணம் வசூலாகாததால் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துள்ளனர்.
கடன் தொல்லை அதிகரித்ததால் ஊரை விட்டு வந்து, பொள்ளாச்சி பி.கே.எஸ். காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து கடந்த இரண்டு நாட்களாக தங்கியுள்ளனர். இந்த நிலையில் 3 பேரும் நேற்று முன்தினம் தீப்பெட்டி தயாரிப்புக்கு பயன்படுத்தும், 'பொட்டாசியம் பெர்மாங்கனேட்' என்ற விஷமருந்தை கலந்து குடித்து, தற்கொலைக்கு முயற்சித்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் முத்துகிருஷ்ணன், முத்துலட்சுமி ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இறந்தனர், மீனாட்சி தீவிர சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






