3 தமிழர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலி: கர்நாடக முதல்-மந்திரி பேச்சுக்கு வேல்முருகன் கண்டனம்

தமிழர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்து கேள்வி கேட்பது எங்கள் உரிமை.
வேல்முருகன்
Published on

சென்னை,

கர்நாடக முதல்-மந்திரி பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது:-

3 தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில், அந்த மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதை விசாரிப்பதற்குப் பதிலாக, தமிழகத்திலிருந்து எழும் நீதிக்குரலை அடக்க முயலும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமாரின் ஆணவப் பேச்சைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மூன்று தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. மூன்று குடும்பங்கள் நிராதரவாக இருக்கின்றன. ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். சம்பவம் குறித்து அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், தமிழக அரசு தனது வேலையைப் பார்க்கட்டும். கர்நாடக நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்ற பொருளில், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் பேசுவது, பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிக்கும் அரசியல் திமிராகவே பார்க்க வேண்டியுள்ளது.

வெளிப்படையான பதில்

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால், தமிழ்நாடு அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டுமா? கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எந்த நோக்கத்திற்காக அப்பகுதிக்குச் சென்றார்கள்? துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அளவுக்கு என்ன நடந்தது? அவர்களிடம் ஆயுதம் இருந்ததா? இருந்தால் அதை அவர்கள் பயன்படுத்தினார்களா? கைது செய்யும் வாய்ப்பு ஏன் ஏற்படுத்தப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வெளிப்படையான பதில் அளிக்க வேண்டிய கர்நாடக அரசு, எங்கள் மாநில விவகாரம் என்று கதவை மூடிக்கொள்வது ஏன்?

கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் அவர்களே!, தமிழ்நாட்டை நோக்கி விரலை நீட்டுவதற்கு முன், உங்கள் அரசின் வனத்துறையினரை நோக்கி கேள்வி எழுப்புங்கள். தமிழர்களின் மரணத்தைப் பற்றி கேட்கும் தமிழக தலைவர்களிடம் தலையிடாதீர்கள் என்று சொல்வதற்கு முன், மூன்று தமிழர்களின் உயிர்கள் ஏன் பறிக்கப்பட்டன? வேறு மாநிலங்களில் அல்லது பிற நாடுகளில் கன்னடரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், நீங்கள் கேள்வி கேட்பீர்களா? மாட்டீர்களா?

சிபிஐ விசாரணை கோரிக்கையையும் நிராகரிக்கும் நீங்கள், உண்மை வெளிவர வேண்டும் என்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? சுதந்திரமான விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? விசாரணையின் மூலம் உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இவை அரசியல் கேள்விகள் அல்ல. உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்கள் கேட்கும் நியாயமான கேள்விகள்.

நீதிக்காகக் குரல் கொடுப்பது எங்கள் கடமை

மேலும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், தமிழ் அமைப்புகள் மீதான தாக்குதல்கள், தமிழகத் தலைவர்களின், குறிப்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் திரைப்படப் பதாகைகள் மற்றும் உருவப்படங்கள் அவமதிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தபோது, கர்நாடக அரசு எத்தனை வழக்குகளைப் பதிவு செய்தது? எத்தனை குற்றவாளிகளைத் தண்டித்தது? தமிழர்களின் பாதுகாப்புக்காக என்ன உறுதியான நடவடிக்கை எடுத்தது? அப்போது அமைதியாக இருந்தவர்கள், இப்போது மட்டும் கூட்டாட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏன்? காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைகளை மறுக்கும் கர்நாடக முதல்-மந்திரி, கூட்டாட்சி தத்துவத்தைக் குறித்து பேசலாமா? தமிழ்நாட்டின் குரலை நீங்கள் கட்டளையிட்டு அடக்க முடியாது. தமிழர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்து கேள்வி கேட்பது எங்கள் உரிமை. நீதிக்காகக் குரல் கொடுப்பது எங்கள் கடமை. எல்லையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துவது எங்கள் பொறுப்பு.

சிபிஐ விசாரணை

எனவே, ஆணவமான அரசியல் பதில்களைத் தவிர்த்து, சம்பவத்தின் முழு உண்மையையும் கர்நாடக அரசு, மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மூன்று தமிழர்களின் மரணம் குறித்து ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான சுதந்திரமான நீதித்துறை விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விசாரணை முடியும் வரை அவர்கள் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும். முழுமையான விசாரணைக்குப் பிறகு, இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகள் என்றாலும் கூட, அவர்களுக்கு கடுமையான தண்டனை நீதித்துறையால் வழங்கப்பட வேண்டும். தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு கேள்வி கேட்கும். நீதி கிடைக்கும் வரை கேள்வி கேட்கும். உண்மை வெளிவரும் வரைப் போராடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com