திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 27ம்தேதி மாலை 4.30 மணியளவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலின் 2025-ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி., பல்வேறு துறைகளின் மாவட்ட நிலையிலான அலுவலர்கள் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர், இணை ஆணையர் உள்ளிட்ட கோவில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கூறியதாவது:
காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பிற்காக சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பக்தர்களின் வருகை மற்றும் கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கான பணியில் ஈடுபடவுள்ளனர். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
27.10.2025 அன்று மாலை 4.30 மணியளவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்வு நடைபெறவுள்ளது. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதிகளில் முழுமையான திருவிழா ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. மேலும் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் பக்தர்கள் பெருமளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதி, கூட்ட ஒருங்கிணைப்புக்கான வசதி, பல்வேறு பகுதியிலிருந்து வருகை புரியும் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதி, கடலில் குளிக்கும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுதல், வரக்கூடிய பக்தர்களின் செல்போன்கள் முழுமையாக செயல்படுவதற்காக தற்காலிக அலைபேசிக் கோபுரங்கள் அமைத்தல், தீத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாகவும், போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதற்கு ஏதுவாகவும் தற்காலிக வாகன நிறுத்தமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து துறைகளின் முழு ஒத்துழைப்புடன் சூரசம்ஹாரம் மற்றும் கந்த சஷ்டி திருவிழா சிறப்புற நடத்தப்படவுள்ளது.
மேலும் கடலில் பக்தர்கள் எவ்வளவு தூரம் வரை செல்லலாம் என்பதற்கான பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு, அப்பகுதிகளுக்கு மேல் செல்லாத வகையில் பக்தர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காகவும், 5 படகுகள் மற்றும் அதற்கான நீச்சல் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தவுள்ளனர். பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வருகை தருவதால், ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் மொத்தமாக 400க்கும் மேற்பட்ட பஸ்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
வரக்கூடிய பக்தர்களின் வசதிக்கேற்ப போதிய அளவிலான பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கு தென்னக ரெயில்வே துறையிடம் பரிந்துரை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் தங்குவதற்கும், போக்குவரத்து வசதிக்கும் இயல்பான நடைமுறைகள் பின்பற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் அருள்முருகன் உள்பட அரசு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






