திருச்செந்தூர் முருகன் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர் பணியிட மாற்றம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் முகக்கவசம் அணிந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர் பணியிட மாற்றம்
Published on

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள். சமீபகாலமாக கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விரைவாக தரிசனம் செய்ய வேண்டுமென்றால் சில அர்ச்சகர்கள் லஞ்ச மாக பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அனுமதிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதற்கிடையில், கடந்த 29-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் முகக்கவசம் அணிந்து ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் தரிசனத்திற்காக ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அர்ச்சகர் உள்பட 5 ஊழியர்கள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், எந்த பாகுபாடும், பாரபட்சமும் இல்லாமல் நட வடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இணை ஆணையர் ராமு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கும், உதவி ஆணையர் மெய்வேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அமைச்சரின் ஆய்வில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com