

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ரமேஷ் அதனை நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி ரத உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் 7-ம் நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேர்கள் தனித்தனியாக இழுக்கப்பட்டது.
இதற்காக தேர்கள் வஸ்திரங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. நேற்று அதிகாலையில் கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருளினர்.
தேரோட்டத்தை பார்ப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவியத்தொடங்கினர். இதனால் மாடவீதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
காலை சுமார் 7.05 மணியளவில் விநாயகர் தேர் மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களால் இழுக்கப்பட்டது. பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாடவீதியை சுற்றி சுமார் 9.40 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து 10.50 மணியளவில் முருகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. 'முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பியபடி மங்கள வாத்தியங்கள் ஒலிக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நூற்றுக்கணக்கான போலீசார் தேரை சுற்றி கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முருகர் தேர் நிலைக்கு வந்ததும் அருணாசலேஸ்வரர் மகா ரதம் இழுப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு. வேலூர் சரக டி.ஜ.ஜி. மகேஷ் உள்ளிட்டோர் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பெண்கள் ஒருபுறமும், ஆண்கள் ஒருபுறமும் தேரின் வடம் பிடித்து இழுப்பதற்காக தயார் நிலையில் நின்றனர். மதியம் 3.10 மணியளவில் சிறப்பு பூஜைக்கு பின்னர் அருணாசலேஸ்வரர் மகா ரதம் எனப்படும் பெரிய தேர் இழுக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் மாடவீதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தேர் அசைந்தாடியபடி சென்றது. விழாவில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கரும்புத் தொட்டில் கட்டி அதில் குழந்தைகளை வைத்து சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெரிய தேர் நிலைக்கு வந்ததும் இரவு பராசக்தி அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் திருவண்ணாமலையில் உள்ள மடங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபத்தை காண வருகிற 24-ந் தேதி 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அனைத்து அடிப்படை மற்றும் பாதுகாப்பு பணிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதன்படி மலைப்பாதை, கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ரமேஷ் அதனை நேரில் ஆய்வு செய்தார்.
இதனிடையே ஓதுவார்களுடன் கலந்துரையாடிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இந்த ஆண்டு தீபத் திருவிழாவில் தமிழ் பக்தி பாடல்களுடன் ஓதுவார்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைப் பாடல்கள் முழங்கும் வகையில் விழாவை சிறப்பாக நடத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.