அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

இளைஞர்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உயர்நிலைக் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர்கல்வியே. இப்படிப்பட்ட உயர்கல்வி உன்னத நிலையை அடைய வேண்டுமென்றால் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும், கட்டமைப்பு வசதிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத அவல நிலை நிலவுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டும் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்தப் பணியிடங்களில் முப்பது சதவீத பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர்களை அரசு உயர்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த முப்பது சதவீத பணியிடங்களை நிரப்பும்போது, பத்து சதவீத பணியிடங்கள் ஓய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டும், பத்து சதவீத பணியிடங்கள் தொழில் வல்லுநர்களைக் கொண்டும், பத்து சதவீத பணியிடங்கள் வெளிநாட்டு பேராசிரியர்களைக் கொண்டும் நிரப்ப வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதிலிருந்து, பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த நான்கு ஆண்டு காலமாக தி.மு.க. அரசு அக்கறை செலுத்தவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஐம்பது சதவீதத்துக்கு மேல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்றால், அங்கு தரமான கல்வியை எப்படி அளிக்க முடியும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது.

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. முதுநிலைப் பட்டம், முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்று அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாக வேண்டும் என்ற கனவில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் தி.மு.க. அரசின் இந்த முடிவினால் சிதைந்து போயிருக்கிறது.

மொத்தத்தில், உயர்கல்வியிலும் அக்கறை இல்லாத, இளைஞர்களின் எதிர்காலத்திலும் அக்கறை இல்லாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக உடனுக்குடன் நிரப்பி, அதன் மூலம் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com