

சென்னை,
தி.மு.க. வேட்பாளர்களின் மூன்றாம் கட்ட பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று வெளியிட்டார். அதில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் அவரது மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு திருவிக நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் திருவிக நகர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. திருவிக நகர் தொகுதியில் அதிக வாக்கு பெற்று வெற்றி பெறுவோம். என்டிஏ கூட்டணி அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெரும்” என கூறினார்.
மேலும், “என்னுடைய கணவர் கொலைக்கு நீதி வேண்டும் அதற்காக நான் போட்டியிடுகிறேன். திருவிக நகர் தொகுதியில் செல்வாக்கு அதிகமாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.