தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்? - இன்று வெளியாகிறது அறிவிப்பு: மகேஷ் குமார் அகர்வாலுக்கு வாய்ப்பு

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல், கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதன்படி, தமிழகத்திற்கான பொறுப்பு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த சூழலில், தேர்தல் முடிந்து த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. பதவிக்காக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியல் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யு.பி.எஸ்.சி. ஒப்புதல் அளித்தது. அவர்கள் 3 பேரில் ஒருவர் விரைவில் டி.ஜி.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது. புதிய டி.ஜி.பி. பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தமிழக காவல் துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இதுபற்றி தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக அருண் நியமனம் செய்யப்பட்டார். சென்னை காவல் துறை ஆணையராக இருந்த அருணை, தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது.

இதேபோன்று, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டி.எஸ். அன்பு நியமனம் செய்யப்பட்டார். நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் தயாள் நியமனம் செய்யப்பட்டார். இதில், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் பதவி வகித்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக உயரிய பதவியான சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டி.எஸ். அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com