போலீஸ் நிலையத்தில் யாக பூஜை: காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

இறப்பு, சந்தேக மரணம் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி வந்ததால் காவல் ஆய்வாளர் கணபதி ஹோமம் நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
போலீஸ் நிலையத்தில் யாக பூஜை: காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Published on: 

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் கணபதி ஹோமம் நடத்திய காவல் ஆய்வாளர் ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த மாதம் 12-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

போலீசார் திணறல்

தற்போது இந்த வழக்கை சி..பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் சிறுமி மாயமாகி 40 நாட்களுக்கு மேலாகியும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

யாக பூஜை

இந்த நிலையில் மாயமான சிறுமி கிடைக்க வேண்டி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு யாகம் வளர்த்து போலீசார் பூஜை செய்தனர். சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மற்ற போலீசாரும் இதில் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் இருந்து தொடர்ச்சியாக சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இறப்பு, சந்தேக மரணம் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி வந்ததால் காவல் ஆய்வாளர் கணபதி ஹோமம் நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தன

ஆயுத படைக்கு மாற்றம்

இந்நிலையில் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் கணபதி ஹோமம் நடத்திய காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

X