

புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
காமேனி மறைவை அடுத்து, பல்வேறு நாடுகளிலும் அவருக்கு ஆதரவாக பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டு உள்ள சூழலில், இந்தியாவில் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலை தொடர்ந்து, மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் 225 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, மொத்தம் 225 விமானங்களில் மும்பை விமான நிலையத்தில் இருந்து 125 விமானங்களும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து 100 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதில் டெல்லி விமான நிலையத்தில் 60 சர்வதேச விமானங்களின் புறப்பாடும், 40 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதேபோன்று, மும்பை விமான நிலையத்தில் 67 சர்வதேச விமானங்களின் புறப்பாடும், 58 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.