நியூசிலாந்து: வாந்தி எடுக்க முயன்றபோது கரண்டியை விழுங்கிய இளம்பெண்!

அறுவை சிகிச்சைக்குப் பிறகு எவ்வித சிக்கல்களும் இன்றி குணமடைந்த அப்பெண், 2 நாட்களில் நலமுடன் வீடு திரும்பினார்.
நியூசிலாந்து: வாந்தி எடுக்க முயன்றபோது கரண்டியை விழுங்கிய இளம்பெண்!
கரண்டி
Published on: 

வெலிங்டன்,

நியூசிலாந்தில் வாந்தி எடுப்பதற்காகப் பயன்படுத்திய முழு அளவிலான முட்கரண்டியை எதிர்பாராதவிதமாக விழுங்கிய 27 வயது இளம்பெண்ணுக்கு, மருத்துவர்கள் அரிதான கீஹோல் அறுவை சிகிச்சை செய்து அதனை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

நடந்தது என்ன?

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள ஹாமில்டன் நகரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், அண்மையில் ஒரு சமூக நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், வாந்தியைத் தூண்டுவதற்காக அங்கிருந்த முழு அளவிலான 'டின்னர் போர்க்' எனப்படும் முட்கரண்டியைத் தொண்டைக்குள் செலுத்தி முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த முட்கரண்டி கைநழுவி உணவுக்குழாய் வழியாக நேராக வயிற்றுக்குள் சென்றுவிட்டது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

கடுமையான வயிற்று வலியுடன் ஹாமில்டன் நகரில் உள்ள வைகாடோ ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில், பெரிய அளவிலான முட்கரண்டி வயிற்றுக்குள் இருப்பது உறுதியானது. அப்பெண்ணுக்கு மனநல பாதிப்புகளோ அல்லது உணவுக் கோளாறுகளோ எதுவும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

தோல்வியில் முடிந்த முதல் முயற்சி

அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, வாய் வழியாகவே முட்கரண்டியை வெளியே எடுக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர். இதற்காக 'எண்டோஸ்கோபி' கருவி மூலம் 2 முறை தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், முட்கரண்டியின் அளவு மிகப் பெரியதாக இருந்ததால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அரிதான கீஹோல் அறுவை சிகிச்சை

இதையடுத்து, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி பிஷ்ஷர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் லேப்ராஸ்கோப்பி எனப்படும் கீஹோல் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவெடுத்தனர். வயிற்றில் சுமார் 4 செ.மீ அளவிற்கு சிறிய துளையிட்டு, வயிற்றுச் சுவர் மற்றும் உள் உறுப்புகளில் எவ்விதக் காயமும் ஏற்படாதவாறு மிகுந்த சவாலுக்கு இடையே அந்த முட்கரண்டியைப் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை

அறுவை சிகிச்சைக்குப் பிறகு எவ்வித சிக்கல்களும் இன்றி குணமடைந்த அப்பெண், 2 நாட்களில் நலமுடன் வீடு திரும்பினார். இந்த அரிய மருத்துவச் சிகிச்சை குறித்த ஆய்வுக் கட்டுரை கடந்த 6-ம் தேதி நியூசிலாந்து மருத்துவ இதழில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. வாந்தியைத் தூண்டுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கூர்மையான மற்றும் பெரிய பொருட்களைத் தொண்டைக்குள் செலுத்துவது உயிருக்குப் பேராபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

X