

பேரறிஞர் அண்ணா அந்தக் காலத்தில், 'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று நாடாளுமன்றத்தில் பேசினார். அதாவது, வட மாநிலங்கள்தான் வளர்கின்றன, தென் மாநிலங்கள் தேய்கின்றன என்பதுதான் அதன் பொருள்.
அதே போலத்தான் தமிழ்நாட்டிலும் இதுவரை புதிய புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்ட நேரங்களில் எல்லாம் சென்னையைச் சுற்றி உள்ள மாவட்டங்களில்தான் தொடங்கப்பட்டன. தென் மாவட்டங்களில் தொழில்கள் தொடங்கப்படவில்லை என்ற குறை முன்பு இருந்தது. அந்தக் குறை சமீப ஆண்டுகளில் சற்று தீர்வைக் காணத் தொடங்கி விட்டது.
முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைக்கப்பட்டவுடன் அவரது ஆலோசனையின் பேரில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அந்தத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அனைத்து தொழில் முனைவோருடனும் தொடர்பு கொண்டனர். அவர்கள் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்த வகையில், ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு முன்பே 'வெற்றி தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள்.
கிரிக்கெட்டில் முதல் பந்தே சிக்சர் என்பதுபோல இந்த முதல் மாநாட்டிலேயே 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ரூ.67,452 கோடி மதிப்பில் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த ஒப்பந்தங்களுடன் சேர்த்து, த.வெ.க. ஆட்சியில் தற்போது மொத்தம் 100 நாட்களில் மட்டும் ரூ.1.02 லட்சம் கோடி மதிப்பிலான 104 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது எதுவென்றால், ரூ.29,337 கோடி மதிப்பிலான 11 ஒப்பந்தங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கையெழுத்தானதுதான். அதாவது, அந்த மாநாட்டின் மொத்த முதலீட்டில் இந்த இரு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு மட்டும் 41.5 சதவீதமாகும்.
இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தொழில் தொடங்குவதற்காக 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தமட்டில் ரூ.15,037 கோடி மதிப்பில் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் விக்ரம் சோலார் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 தொழிற்சாலைகள் தொடங்கப்பட இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக தொடங்கப்படும் தொழில் என்றால், அது ரூ.10 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட இருக்கும் ‘லைட் ஹவுஸ் கிரீன் டேட்டா சென்டர்' என்று கூறப்படும் தரவுமையம்தான். எதிர்காலமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) என்ற நிலையில் அந்த ஏ.ஐ. தொழிலுக்கு அஸ்திவாரமாக அதாவது, தாங்கிப்பிடிப்பது இத்தகைய தரவு மையங்கள்தான்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய தரவு மையங்கள் அமைக்க போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் தென் மாவட்டத்தில் இந்தத் தரவு மையம் அமைவது ஒரு முன்னோடியாக இருக்கும். விசாகப்பட்டினத்தில் கூகுள், குஜராத்தில் ரிலையன்ஸ் ஆகியவை தரவு மையங்கள் அமைக்க இருக்கும் சூழ்நிலையில், இந்த லைட் ஹவுஸ் கிரீன் டேட்டா சென்டரை தூத்துக்குடி மாவட்டத்தின் தென்கோடியில் தொடங்க இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அரசின் தொழில்துறை அனைத்து உதவிகளையும் வழங்கி விரைவில் அந்த மையம் தொடங்கப்பட உதவிக்கரம் நீட்ட வேண்டும்.