சாம்பியன்ஸ் டிராபி: பாக்.கிரிக்கெட் வாரியத்தை கலாய்த்த மைக்கேல் வாகன்.. என்ன நடந்தது..?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடக்க ஆட்டம் கராச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி: பாக்.கிரிக்கெட் வாரியத்தை கலாய்த்த மைக்கேல் வாகன்.. என்ன நடந்தது..?
Published on

லண்டன்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

கராச்சியில் நேற்று அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 118 ரன்களும், வில் யங் 107 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் கடின இலக்கை நோக்கி களம் கண்ட பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியோடு தொடங்கியது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குஷ்தில் ஷா 69 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்கே, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லாதம் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

முன்னதாக இந்த ஆட்டம் தொடங்கிய வேளையில் கராச்சி மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை. நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் கூட்டம் சிறிது அதிகரித்தது. இருப்பினும் மைதானத்தில் எதிர்பார்த்த அளவில் ரசிகர்கள் வரவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கலாய்த்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1996க்குப் பிறகு இது இங்கு நடக்கும் முதல் பெரிய போட்டி. உள்ளூர்வாசிகளிடம் இது நடக்கப் போகிறது என்று சொல்ல மறந்துவிட்டார்களா? கூட்டம் எங்கே?" என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com