

வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் - வாஷிங்டன் பிரிடம் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் அதிகபட்சமாக 86 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் 18.3 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் நியூயார்க்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வாஷிங்டன் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய வாஷிங்டன் வீரர் அண்ட்ரிஸ் கஸ் 96 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முன்னதாக, இரு அணிகளும் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.