டி.என்.பி.எல் - நெல்லையை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சேப்பாக் தரப்பில் அபாரமாக பந்து வீசிய அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
TNPL - Abhishek Tanwar is amazing...Chepauk Super Gillies beat Nellai
Published on

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக கே ஆஷிக் மற்றும் மொஹித் ஹரிஹரன் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் மொஹித் ஹரிஹரன் 2 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் கண்ட பாபா அபராஜித் 41 ரன்னில் அவுட் ஆனார். நிலைத்து நின்று ஆடிய ஆஷிக் அரைசதம் அடித்த அசத்திய நிலையில் 54 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து விஜய் சங்கர் மற்றும் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தனர். இதில் ஜெகதீசன் 13 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய ஸ்வப்னில் 14 பந்தில் 45 ரன் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் சேப்பாக் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 212 ரன்கள் எடுத்தது. நெல்லை தரப்பில் அதிகபட்சமாக யுதீஷ்வரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெல்லை விளையாடியது. சேப்பாக் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நெல்லை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுக்க, மறுபுறம் அணியின் கேப்டன் அருண் கார்த்திக் நிலைத்து நின்று ஆடினார்.

பின்னர் அருண் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த  முகமது அட்னான் கான்  வேகமாக ரன்களை சேர்க்க நெல்லை அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருப்பினும், அருண் கார்த்திக் 52 (41) ரன்களிலும், முகமது அட்னான் கான் 48 (27) ரன்களிலும் அவுட்டாகினர். இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றது.

நெல்லை தரப்பில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 52 (41) ரன்கள் எடுத்தார். சேப்பாக் தரப்பில் அபாரமாக பந்து வீசிய அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com