

தம்புல்லா,
இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இலங்கை-ஏ அணியுடன் இந்தியா-ஏ அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை-ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா-ஏ அணி 49.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களை எடுத்தது. இதனால், போட்டி டை(சமன்) ஆனது.
போதிய வெளிச்சம் இல்லை என்பதால், ஆட்டத்தை முடித்துக் கொண்டு, இரு அணிக்கும் தலா ஒரு புள்ளியை வழங்க நடுவர் முடிவு செய்தார். இதனை இலங்கை ஏ அணி கேப்டன் ஒப்புக் கொண்ட நிலையில், இந்திய ஏ அணி கேப்டன் திலக் வர்மா ஒப்புக் கொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை-ஏ அணி 16/0 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய ஏ அணி 9/0 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தநிலையில், வைபவ் சூர்யவன்சி, இலங்கை வீரர் விஷின் ஹலம்பட்ஜ் இடையே ஏற்பட்ட மோதல் கவனம் ஈர்த்தது.
வெற்றி பெற்றநிலையில், இலங்கை வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கை வீரர் விஷின் ஹலம்பட்ஜ், வார்த்தைகளை விட்டதுபோல் தெரிகிறது. இதனால் சூர்யவன்ஷி கோபமடைந்து, ஹலம்பட்ஜை அடிக்க பாய்ந்தார். உடனே, இலங்கை கேப்டன் நிரோஷன் டிக்வேலா இலங்கை வீரர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.