

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று (நவம்பர் 5) தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கோலி, வயது அதிகரித்தாலும் தனது பேட்டிங் திறமையிலும் ரன் குவிக்கும் வேகத்திலும் தொடர்ந்து அசத்தி வருகிறார்.
குறிப்பாக, 2026ஆம் ஆண்டில் இதுவரை வெறும் 10 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், 626 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவரது சராசரி 69.55 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 120.61 ஆகவும் உள்ளது. இரண்டு சதங்கள் மற்றும் நான்கு அரைசதங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ரன்கள் எடுத்திருந்த கோலி, அப்போது 72.47 சராசரியுடன் விளையாடினார். தற்போது குறைவான போட்டிகளில் விளையாடினாலும், அதே அளவிலான நிலைத்தன்மையுடன் அதிக வேகத்தில் ரன்களைக் குவித்து வருகிறார்.
டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,002 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 115.17 ஸ்டிரைக் ரேட்டும், 30 சிக்ஸர்கள் மற்றும் 90 பவுண்டரிகளும் அடங்கும். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 51 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இன்னிங்ஸில் 13 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். விராட் கோலியின் பேட்டிங் திறமை குறித்து முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்தியும் பாராட்டியுள்ளார்.
கடினமான ஆடுகளத்திலும் எந்தவித பதற்றமும் இன்றி விளையாடும் கோலியின் அணுகுமுறை தனித்துவமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸும், ஆட்டத்தின் வேகத்தைச் சரியாகக் கணித்து விளையாடும் கோலியின் திறனைப் பாராட்டியுள்ளார். உடற்தகுதி, கடின உழைப்பு, ரன்களைக் குவிக்கும் வேகம் என 38 வயதிலும் தொடர்ந்து சாதித்து வரும் விராட் கோலி, 2027 ஒருநாள் உலகக் கோப்பையை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்