

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் நேற்று நடந்த 5-வது லீக்கில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 25.3 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. உள்நாட்டில் பாகிஸ்தானின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும்.
அதிகபட்சமாக பாபர் அசாம் 29 ரன் எடுத்தார். இலங்கை இடக்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா 8.3 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 38 ரன் மட்டுமே விட் டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. கமிந்து மென்டிஸ் (62 ரன்), பவன் ரத்னாயகே (23 ரன்) களத்தில் இருந்தனர். 2-வது வெற்றியை ருசித்த இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஏற்கனவே பாகிஸ்தானும் (3 வெற்றி. ஒரு தோல்வி) இறுதி சுற்றை எட்டி விட்டது.
வெற்றி தொடர்பாக பேசிய இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ்,
எங்களது பந்துவீச்சாளர்கள் பவர்பிளே மற்றும் அதற்குப் பிறகும் மிகச் சிறப்பாகப் பந்துவீசினர். இந்தப் போட்டிக்காகத் திட்டமிட்டு வந்த அவர்கள், அதைச் சிறப்பாகச் செயல்படுத்தினர். இதனால் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளரும் திருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக, பவர்பிளேவில் தில்ஷன் மதுஷங்கா சிறப்பாகப் பந்துவீசினார். இன்னும் சில விஷயங்களில் முன்னேற்றம் தேவைப்பட்டாலும், அசிதா மற்றும் மலிங்கா ஆகியோரும் சிறப்பாகச் செயல்பட்டனர். இன்றைய பந்துவீச்சு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டி, இறுதிப்போட்டிக்குத் தயாராக உதவுமா என்ற கேள்விக்கு, நிச்சயமாக உதவும் . அடுத்த போட்டியிலும் வழக்கமான தீவிரத்துடன் விளையாடுவோம். ஒருசில மாற்றங்களைச் செய்து, உலகக் கோப்பைக்கு முன்பாக மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பளித்துப் பரிசோதிக்க வேண்டியுள்ளது. இன்னும் சில போட்டிகளே எஞ்சியுள்ளதால், அடுத்த ஆட்டத்திலும் வெற்றி பெற முயற்சிப்போம்.
பேட்டிங்கில் தொடர்ந்து துரதிர்ஷ்டம் துரத்துவது குறித்துப் பேசிய அவர், இன்றைய போட்டியிலும் துரதிர்ஷ்டவசமாக ரன்கள் எடுக்க முடியவில்லை. அடுத்த போட்டியில் ரன்கள் குவிப்பேன் என்று நம்புகிறேன்” என்றார்.