

நியூயார்க்,
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
பிபா உலகக்கோப்பை காலிறுதியில் இரவு 12.30 மணிக்கு நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இதுவரை தோல்வியே சந்திக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளதால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் இதற்கு முன்பு 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 1986 உலகக்கோப்பையில் பெனால்டி சூட்-அவுட்டில் 5-4 என்ற கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றது. அதன்பின்னர் 1990 உலகக்கோப்பையில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஸ்பெயின் பழிதீர்த்தது.
ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், இரு அணிகளும் இதுவரை 22 முறை மோதியுள்ளன. இதில் ஸ்பெயின் 12 வெற்றிகளும், பெல்ஜியம் 5 வெற்றிகளும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணியின் மிகப்பெரிய பலமாக அதன் தடுப்பாட்டம் அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் எதிரணிக்கு ஒரு கோல் கூட அடிக்க வாய்ப்பு அளிக்காமல் அபாரமாக செயல்பட்டுள்ளது.
குரூப் சுற்றில் சவுதி அரேபியாவை 4-0, உருகுவேயை 1-0 என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், கேப் வெர்டேவுடன் 0-0 என டிரா செய்தது. தொடர்ந்து ரவுண்ட் ஆப் 32-ல் ஆஸ்திரியாவை 3-0 எனவும், ரவுண்ட் ஆப் 16-ல் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகலை 1-0 எனவும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
18 வயதான இளம் நட்சத்திரம் லமின் யமால் மீது இந்த போட்டியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடரில் இதுவரை ஒரு கோல் மட்டுமே அடித்துள்ள அவர், பெல்ஜியத்தின் வலுவான தடுப்பாட்டத்தை உடைத்து தனது முத்திரையை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
மறுபுறம் பெல்ஜியம் அணியும் இந்த தொடரில் தோல்வியின்றி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 2 டிரா பெற்றுள்ளது.
குரூப் சுற்றில் நியூசிலாந்தை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம், ஈரானுடன் 0-0 மற்றும் எகிப்துடன் 1-1 என டிரா செய்தது. ரவுண்ட் ஆப் 32-ல் செனகலை 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வீழ்த்திய அந்த அணி, ரவுண்ட் ஆப் 16-ல் தொடரை நடத்தும் அமெரிக்காவை 4-1 என சாய்த்து அரையிறுதி வாய்ப்பை நோக்கி முன்னேறியுள்ளது.
வரலாற்று சாதனைகள், நேருக்கு நேர் மோதல் புள்ளிவிவரங்கள் மற்றும் தற்போதைய பார்மை கணக்கில் எடுத்து பார்த்தால் ஸ்பெயின் அணிக்கு சற்று கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், பெல்ஜியத்தின் அதிரடி தாக்குதல் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டது. இதனால், நள்ளிரவு நடைபெறும் இந்த காலிறுதி ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு விறுவிறுப்பான விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.