

பெங்களூரு: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.95 லட்சம் மதிப்பிலான தங்கம், பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கியது. இதுதொடர்பாக தமிழக பயணிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தமிழக பயணிகள்
வளைகுடா நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த 42 வயது பயணி ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் வளைகுடா நாட்டில் இருந்து ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 283 கிராம் தங்கச்சங்கிலியை ஆடையில் மறைத்து வைத்து கடத்தியது தெரிந்தது. இதனால் அந்த பயணி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்த பயணி தமிழ்நாடு சிவகாசியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதுபோல துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் ரூ.21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 456 கிராம் தங்கச்சங்கிலி கடத்தி வந்த மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த 32 வயது பயணி கைது செய்யப்பட்டார்.
இதுபோல சவுதி அரேபியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த தமிழ்நாடு தஞ்சாவூரை சேர்ந்த 30 வயது பயணி, ரூ.16 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 347 கிராம் தங்கத்தை கடத்தி வந்தார். அவர் கைது செய்யப்பட்டதுடன், தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஐ-போன்கள் பறிமுதல்
துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த 2 பெண் பயணிகளிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் பயணியிடம் இருந்து ரூ.42 லட்சம் மதிப்பிலான தங்கமும், இன்னொரு பெண் பயணியிடம் இருந்து ரூ.12 லட்சம் 40 ஆயிரம் மதிப்பிலான தங்கச்சங்கிலி, 12 ஐ-போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த 2 பெண் பயணிகளும் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 5 பயணிகளிடம் இருந்து ரூ.95 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தங்கம், ஐ-போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.