சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.44 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல் ஒருவர் கைது;


சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.44 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல் ஒருவர் கைது;
x
தினத்தந்தி 15 Oct 2017 10:45 PM GMT (Updated: 15 Oct 2017 7:52 PM GMT)

சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மேலும் இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஆலந்தூர்,

சிங்கப்பூரில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று விமானம் ஒன்று வந்தது. பின்னர் டெல்லிக்கு செல்ல இருந்த அந்த விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு இருக்கையின் கீழே மர்ம பொட்டலம் ஒன்று இருந்ததை கண்டனர்.

அதை எடுத்து பார்த்தபோது அதில் தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டு சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். உடனே அதிகாரிகள் வந்து சோதனையிட்ட போது, அதில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இதில், அந்த இருக்கையில் சென்னையை சேர்ந்த அஸ்கர்அலி (வயது 32) என்பவர் பயணித்திருந்தது தெரியவந்தது. விமான நிலைய குடியுரிமை சோதனைப்பகுதியில் இருந்த அவரை சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதைப்போல சிங்கப்பூரில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த கிருஷ்ணமுர்த்தி சுதாகர் (32) என்பவரின் சூட்கேசில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக அவர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் துபாயில் இருந்து வந்த வேறொரு விமானத்தின் இருக்கைக்கு அடியிலும் தங்கக்கட்டிகள் இருந்த பொட்டலம் ஒன்று இருந்ததை ஊழியர்கள் கண்டறிந்து சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். அதில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம் இருந்தது. அதை கைப்பற்றிய அதிகாரிகள், அதை கொண்டு வந்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story