இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் - பெஞ்சமின் நெதன்யாகு


இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் - பெஞ்சமின் நெதன்யாகு
x

கோப்புப்படம்

மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

டெல் அவிவ்,

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "இஸ்ரேல் தனது நட்பு நாடுகளின் ஆலோசனைக்கு முரண்பட்டாலும், இஸ்ரேல் தனது சொந்த முடிவுகளை எடுக்கும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்தையும் செய்யும்" என்று அவர் கூறினார்.

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்த பின்னர் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நெதன்யாகு இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக ஜெர்மனியும், இங்கிலாந்தும் ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஈரானுடனான எந்தவொரு கூடுதல் நேரடிப் பகைமையும் மத்திய கிழக்கில் முழுமையான போருக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளன.

இருந்தபோதும், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்க உள்ளதாக இஸ்ரேல் உறுதியாக தெரிவித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.


Next Story