பூந்தமல்லி,
அயனாவரம், அப்பாதுரை 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரோஷன் (வயது 24). போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கல்லூரி முடிந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அண்ணாநகர், சாந்தி காலனி 4-வது அவென்யூவில் உள்ள சாலையில் கார் வேகமாக சென்ற போது, அங்குள்ள தடுப்பு சுவரில் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. மேலும் காரின் உள்ளே இருந்த தானியங்கி ஏர்-பேக் உடனடியாக திறந்ததால், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் காரை ஓட்டிவந்த ரோஷன் உயிர் தப்பினார்.
மேலும் இந்த விபத்தின் போது, எதிரே மொபட்டில் வந்த ரவி (29), வாசுதேவன் (49) ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கிய காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
இதுதொடர்பாக ரோஷனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேகமாக வந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.