சென்னை,
சென்னையில் தினசரி 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் பெரும்பாலும் மின்சார ரெயிலயே நம்பி உள்ளதால், காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதி காணப்படும்.
இந்நிலையில், நேற்று காலை 9.15 மணி அளவில் சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையம் அருகே திடீரென சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால், ஆவடி, கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட் மார்க்கமாக வந்த 7 மின்சார ரெயில்கள் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கும், பேசின் பாலம் ரெயில் நிலையத்துக்கும் இடையே நடுவழியில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த மின்சார ரெயில்களும் சிக்னல் பிரச்சினையால் புறப்பட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள், சிக்னலில் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, வெகுநேரமாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நின்றதால், பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், தண்டவாளத்தில் இறங்கி பொடி நடையாக நடந்து, மூர்மார்க்கெட் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தனர்.
இதையடுத்து 30 நிமிடங்களுக்கு பிறகு சிக்னலில் ஏற்பட்ட பிரச்சினை சரி செய்யப்பட்டு, மின்சார ரெயில்கள் புறப்பட்டு சென்றன. இந்த சிக்னல் கோளாறால் பயணிகள் நேற்று கடும் அவதி அடைந்தனர்.