வேலூர்,
வேலூரை அடுத்த பொய்கை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது40). விவசாயி. இவர் கடந்த 12.1.2014 அன்று இரவு 8 மணியளவில் இலவம்பாடி ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த காதர் என்கிற அப்துல்காதர் (33), தேவராஜ் நகரை சேர்ந்த குட்டா என்கிற சுரேஷ் (34), இந்திராநகரை சேர்ந்த தங்கராஜ் ஆகியோர் சேர்ந்து துரைராஜை வழி மடக்கினர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் துரைராஜை தாக்கி, ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.450 மற்றும் 2 செல்போன்களை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து துரைராஜ் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது ஜாமீனில் வந்திருந்த தங்கராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு விட்டார்.
இந்த வழக்கில் நேற்று நீதிபதி எம்.பாரதி தீர்ப்பு கூறினார். அதில் காதர் என்கிற அப்துல்காதர், குட்டா என்கிற சுரேஷ் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.