ஆவூர்,
திருச்சி ராஜாகாலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பூபதி கண்ணன் (வயது 45). இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை பிரிவு) பணியாற்றி வந்தார். பூபதி கண்ணனின் மனைவியான அனுராதா திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். பூபதி கண்ணன் தினமும் காரில் பணிக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 27-ந்தேதி பணிக்கு சென்ற பூபதி கண்ணன், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை மனைவி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை பூபதி கண்ணன் திருச்சி அருகே மாத்தூர் பகுதியில் தஞ்சாவூர் செல்லும் அரைவட்ட சுற்றுச்சாலை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே கார் நின்றது. கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர்.
இந்த கொலை சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோ, அன்பு ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கொலையான பூபதி கண்ணனின் செல்போனை வைத்து, அவரிடம் யார் அதிகம் பேசி உள்ளனர் என போலீசார் விசாரித்தனர். இதில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அவருடன் டைப்பிஸ்டாக பணியாற்றும் திருச்சி நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த சவுந்தர்யா அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பூபதி கண்ணன் திருச்சியில் இருந்து பணிக்கும் செல்லும் போது, சவுந்தர்யாவையும் காரில் ஏற்றிச்சென்று வந்துள்ளார். மேலும் 2 பேரும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியதில் அவர்களது பழக்கம் நெருக்கமானது. அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. சவுந்தர்யாவின் கணவர் இறந்து விட்டார்.
சம்பவத்தன்று பூபதி கண்ணனுடன் சவுந்தர்யா காரில் வந்துள்ளார். தொண்டைமான்நல்லூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சோதனையிட்ட போது, பூபதி கண்ணனின் காரில் சவுந்தர்யா இருந்தது பதிவாகி இருந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாத்தூர் போலீசார், தனிப்படை அதிகாரிகளிடம் கேட்டபோது, பெண் ஊழியர் சவுந்தர்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம். பல தகவல்களை அவர் மறைத்து வருகிறார். கொலைக்கான காரணம் என்ன? என்பது இன்னும் விசாரணையில் தெரியவில்லை. சவுந்தர்யா கூலிப்படையை ஏவி, பூபதி கண்ணனை கொலை செய்தாரா? இதற்கு கள்ளக்காதல் விவகாரம் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றோம். பூபதி கண்ணனின் மனைவியிடம் விசாரணை நடத்திய போது, தனது கணவரின் கள்ளக்காதல் பற்றி தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார் என்றனர்.
கள்ளக்காதலில் ஏற்பட்ட விரிசல் காரணமா? அல்லது பூபதி கண்ணனின் தொந்தரவு காரணமா? அல்லது வேறு நபர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் சிக்கிய பெண் ஊழியரிடம் இருந்து வரும் தகவல்களை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலையில் சக பெண் ஊழியர் ஒருவர் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.