நெல்லை,
நெல்லை மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் 50 பேர் கொண்ட சிறப்பு வாலிபர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 212 பள்ளிக்கூடங்கள், 8 கல்லூரிகள், 10 தங்கும் விடுதிகளில் இந்த குழுவினர் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டனர். இவர்கள், நேற்று பாளையங்கோட்டையில் ஒரு பள்ளிக்கூடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள 50 அடி உயரம் கொண்ட குடிநீர் தேக்க தொட்டியில் இக்குழுவை சேர்ந்த பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த ஜவகர் மகன் ராகவ் (வயது 24) என்பவர் ஏறினார். அந்த தொட்டிக்குள் இறங்கி டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கீழே இறங்க வர முயற்சி செய்தார். தொட்டி 50 அடி உயரத்தில் இருந்ததால் இறங்க முடியாமல் தவித்தார். தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் 2 மணி நேரம் போராடி அவரை கீழே இறக்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.