வள்ளியூர்,
ரூ. 500, 1000 நோட்டுகளை ஒழிப்பதன் மூலம் நாட்டில் கருப்பு பணமும், பயங்கரவாதிகளிடம் இருந்து கள்ள நோட்டுக்களும் ஒழிக்கப்பட்டு விடும் என சொன்னார்கள். ஆனால் சொன்னபடி நடந்ததா என்றால் இல்லை. வாங்கப்பட்ட பழைய நோட்டுக்களை இன்றுவரை எண்ணிக்கூட முடிக்கவில்லை. கருப்பு பணத்தையும் ஒழிக்கவில்லை.
ஜி.எஸ்.டியால் வெளிநாட்டு வங்கிகள் 20 முதல் 50 சதிவிகிதம் லாபம் அடைந்துள்ளது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலத்தில் தினந்தோறும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் வேளையில் வங்கிகளுக்கு மட்டும் இந்த பணம் போவது, கருப்பு பணத்தை சுயாட்சியாக சுதந்திரமாக புழக்கத்தில் விடுவதையே காட்டுகிறது.
தமிழகத்தில் சாக்கடைகள் பெருகி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யகூடிய அளவிற்கு கொசு பெருகியுள்ளது. நம்மால் சீனாவை எதிர்த்து போராட முடிகிறது. கொசுவை கொல்லுவதற்கு வழியை காணோம். விண்வெளிக்கு விண்கலன் அனுப்ப முடிகிறது. அணுகுண்டு செய்ய முடிகிறது. ஆனால் கடிக்கிற கொசுவை தடுக்கமுடியவில்லை என்றால் ஆட்சியாளர்களுக்கு தங்களது கடமையை நிறைவேற்ற தெரியவில்லை. அதற்கு பதிலாக எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா என்கிறார்கள்.
தமிழகத்தில் குளங்கள், ஆறுகள் தூர் வாரப்படவில்லை. புதர்கள் மண்டி கிடக்கிறது. ஆற்றுப்பகுதிகளில் தனியார் ஆலைகள் தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்கிறார்கள். குவாரிகளை விதிமுறைக்கு புறம்பாக நடத்துகிறார்கள். வளர்ச்சி என்ற பெயரால் இந்திய மக்கள்மீது முதலாளித்துவம் கடுமையான தாக்குதலை நடத்துகிறது. அரசு அதன் கூட்டாளியாக காட்டி கொண்டிருக்கிறது. இதனை கண்டிக்கிற வகையில் இந்தியா முழுவதிலும் நவம்பர் 8-ந் தேதி கறுப்பு தினமாக அறப்போராட்டம் நடத்தவுள்ளோம்.
ஜி.எஸ்.டி மூலம் 98 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது. இதிலிருந்து தமிழகத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வரவேண்டும். டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது. எந்தவித புதிய திட்டமும் நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கும்போது ரேசனில் சீனி விலை உயர்த்தியிருப்பது எந்தவகையில் நியாயம் என்ற தெரியவில்லை. மத்தியில் ஆள்பவர்கள் என்ன சொன்னாலும் செய்கின்ற அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் மக்களுக்காக பேசினால் வரவேற்போம். இன்னும் அவர் வருவாரா? அல்லது வரமாட்டாரா? என்று சூதாட்டமாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.