நெல்லை,
நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவிகள் ஏராளமானோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவிகள், கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:- தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டு படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2018-19-ம் ஆண்டில் படித்த மாணவிகளுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் எங்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே முதலில் எங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.