சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்துக்கு பின்புறம் நேற்று காலையில் சிலர் நடைபயிற்சி சென்றனர். அப்போது கால் மட்டும் வெளியில் தெரிந்த நிலையில் ஒரு உடல் கடற்கரை மணலுக்குள் புதைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து நடை பயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, கடற்கரை மணலில் புதைந்து கிடந்த உடலை மீட்டனர். அது ஒரு பெண்ணின் உடல் என தெரியவந்தது.
அரை நிர்வாணத்தில் அந்த பெண்ணின் உடல் இருந்தது. கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட ரத்த காயம் காணப்பட்டது. மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து இருந்தது. அந்த பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு, பிணத்தை கடற்கரை மணலில் அரைகுறையாக புதைத்துவிட்டு தப்பி சென்று உள்ளனர்.
அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அந்த பெண்ணின் வயது சுமார் 40 இருக் கும். உடல் அருகே செருப்பு, செல்போன் ஆகியவை கிடந்தன.
அந்த செல்போனை வைத்து அந்த பெண்ணை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது பற்றி அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் அது உறுதியாக தெரியவரும் என போலீசார் கூறினர். அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.