ஆத்தூர்,
ஆத்தூர் அருகே உள்ள நைனார்பாளையம் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் காலனியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 9.45 மணிக்கு திடீரென்று அங்குள்ள ஆத்தூர் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் சாலையின் நடுவில் உட்கார்ந்திருந்தனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அப்பகுதி மக்கள் கூறும் போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பயனாளிகள் பட்டியல் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாகவும், அதில் தங்கள் பெயர்கள் விடுபட்டு உள்ளதாகவும், இதற்கு ஊராட்சி செயலாளர் இரவு நேரத்தில் வந்து கணக்கெடுப்பு பணி நடத்தியது தான் காரணம். எனவே எங்கள் பெயரையும் அதில் சேர்க்க வேண்டும் என்றனர்.