எருமப்பட்டி,
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் 4-வது ஆடிவெள்ளியையொட்டி விளக்குபூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து தயிர், பால், சந்தனம், இளநீர், மஞ்சள் மற்றும் நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற விளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் சுயம்பு மகா மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி 108 சங்காபிஷேகம் மற்றும் 508 பால்குட அபிஷேக விழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி பால்குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பால் குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து புண்யாகம், பஞ்சகவ்யம், சங்குபூஜை, யாக வேள்வி, பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு 508 பால்குட அபிஷேகமும், 108 சங்காபிஷேக பூஜையும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிபாளையம் தேவாங்கபுரத்தில் கருமாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புற்று மாரியம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு வைத்து வழிபாடு செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 24 மனை ஓம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதே போல வரலட்சுமி விரதத்தையொட்டி நன்செய் இடையாறு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மன் ஆயிரம் கண் உடையாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். ராசிபுரம் புதுப்பாளையம் ரோட்டில் உள்ள எல்லை மாரியம்மன் 10,001 வளையல்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் படைத்து பக்தர்கள் வழிபட்டனர். மேலும், பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது. திருச்செங்கோடு ஐந்துரோடு அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்திலும், சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மஞ்சள் கயிறு அலங்காரத்திலும் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல திருச்செங்கோடு நகரில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.