மும்பை,
தென்மும்பை டோங்கிரியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தஇடத்துக்கு மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள், பத்திரிகையாளர்களிடம் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வந்தீர்களா? அல்லது எங்களது குறைகளை கேட்க வந்தீர்களா? என அவரை நோக்கி ஆவேசமாக சத்தம் போட்டனர். மேலும் அவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மேயரை பத்திரமாக அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இதேபோல மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்தேசி நேரில் பார்வையிட வந்தார். அங்கு சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதகதியில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விபத்து குறித்து அவர் தெரிவிக்கையில், கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இடிந்து விழுந்த கட்டிடம் தணிக்கை செய்யப்பட்டதா? என்பது குறித்து முழு விசாரணை நடத்தப்பட உள்ளது. இரவு நேரத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ள வசதியாக மின்இணைப்புகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மோப்பநாய் படை பிரிவு உதவியுடன் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
எனினும் அவரை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் சட்டவிரோத கட்டிடத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள் இதற்கு பதில் சொல்லுங்கள் என கடுமையாக சாடினர். ஆனால் அவர் எதற்கும் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.