மாவட்ட செய்திகள்

மோட்டார் வாகன சட்டத்தால் தொழில்கள் நலிவடைந்துவிட்டன காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

மோட்டார் வாகன சட்டத்தால் தொழில்கள் நலிவடைந்து விட்டன என கரூரில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

தினத்தந்தி

கரூர்,

கரூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். கரூர் நகர தலைவர் சவுந்தரராஜன் வரவேற்று பேசினார். கரூர் எம்.பி. ஜோதிமணி, செயல் தலைவர் மோகன்குமாரமங்கலம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டுபேசினார்.

கூட்டத்தில், காங்கிரசின் மூத்த நிர்வாகி ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பது, கரூர் மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் கரூர் அமராவதி ஆற்றில் கடைமடை வரை தண்ணீர் திறக்க வேண்டும், பஞ்சப்பட்டி, தாதம்பாளையம் உள்ளிட்ட ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரி நீரை சேமித்து வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நி-வேற்றப்பட்டன. இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பழனிசாமி, ராமநாதன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு, வர்த்தக அணி மாவட்ட தலைவர் லியோ சதீஷ்குமார் மற்றும் சேங்கல்மணி உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொழில்கள் நலிவடைந்துவிட்டன

தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், மோடி அரசின் கடுமையான நிதிநெருக்கடியால் நாடு முழுவதும் தொழில்கள் முடங்கியுள்ளன. இது பொருளாதார சுனாமிபோல் உள்ளது. இதை மூடி மறைக்க பல்வேறு வித்தைகளை மோடி காட்டி வருகிறார். இந்தியாவில் உள்ள ஏற்றுமதி நகரங்களில் கரூர் 5-ம் இடத்தில் உள்ளது. இங்கு ஜவுளி உற்பத்தி, பஸ் கூண்டு கட்டுதல் போன்ற தொழில்கள் மோடியின் மோட்டார் வாகன சட்டத்தால் நலிவடைந்துவிட்டன. ஜி.எஸ்.டி. வரியால் டெக்ஸ்டைல் தொழில் தேய்ந்துவிட்டது. ஆட்டோ மொபைல் தொழிலில் 50 சதவீதம் உற்பத்தி குறைந்துவிட்டது. ஆட்டோ மொபைல் தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அன்றாட செலவுக்கு மத்திய அரசிடம் பணம் இல்லை.

முதலீட்டு மாநாடுகள்

இதனால்தான ரிசர்வ் வங்கியின் உபரிநிதியான ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை சட்டத்திற்கு புறம்பாக, மரபுகளை மீறி பெற்றிருக்கிறார்கள். மாநில அரசு இதைப்பற்றி கவலைப்படுவதே கிடையாது. இந்தியாவில் மாணவர்களுக்கு கல்விக்கடன், அகல ரெயில்பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டத்திற்கு நிதியுதவி வாங்கிக்கொடுத்தது ப.சிதம்பரத்தின் பெரிய சாதனை. முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வதை குறைகூறவில்லை. ஆனால் தமிழக காங்கிரசின் கேள்வி என்னவென்றால் இருமுறை அன்னிய முதலீட்டு மாநாடுகள் நடத்தினர். இதில் எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன, எவ்வளவு தொழிற்சாலைகள் பரிசீலனையில் உள்ளன, அதன் கோப்புகள் எவ்வளவு நாள் பரிசீலனையில் உள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குளம் தூர்வாரும் பணி

முன்னதாக தரகம்பட்டி அருகே களுத்தரிக்கப்பட்டியில் உள்ள வவுரன் குளத்தை காங்கிரஸ் சார்பில் தூர்வாரும் பணி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு கரூர் ஜோதிமணி எம்.பி. தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் குமார், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மாணிக்கம், அருணாச்சலம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்