மாவட்ட செய்திகள்

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறைகளை திறக்க கோரிக்கை

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறைகளை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மீனம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே குளத்துமேடு கருமாரி அம்மன் கோவில் தெரு உள்ளது. இப்பகுதி ராணுவத்துக்கு சொந்தமானது. இங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக 300-க்கும் அதிகமானவர்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் இங்கு வசிப்பவர்கள் ரெயில்வே தண்டவாளம் அருகேயும், மறைவான முட்செடிகள் உள்ள பகுதியையும் திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்தி வந்தனர். இதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது சிலர் அடிப்பட்டு இறந்தும் உள்ளனர்.

தினத்தந்தி செய்தி எதிரொலி

எனவே இங்கு கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது பற்றி தினத்தந்தியிலும் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பரங்கிமலை- பல்லாவரம் கண்டோண்மெண்ட் போர்டு நிர்வாகம் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் செலவில் குளத்துமேடு பகுதியில் கழிப்பிட வசதி செய்து தர முடிவு செய்தது.

இதற்கு ராணுவ அதிகாரிகள் அனுமதி பெற்று ஆண்கள், பெண்களுக்கு என 14 கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. இந்த கழிப்பிடங்களுக்கு தண்ணீர் வசதி செய்து ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தற்போது 4 கழிவறைகளை மட்டும் கண்டோண்மெண்ட் போர்டு அதிகாரிகள் திறந்துவிட்டு மற்றவற்றை பூட்டி விட்டனர்.

திறக்க கோரிக்கை

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

தற்போது திறந்துள்ள கழிவறைகளை பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் மீண்டும் திறந்தவெளி கழிவறைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. பொது கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

மூடப்பட்ட கழிவறைகளை திறந்துவிட வேண்டும் என்று கண்டோண்மெண்ட் போர்டு அதிகாரிகளிடம் கேட்டால் எந்த பதிலும் இல்லை. திறந்தவெளி கழிப்பிடம் செல்வதை தடுக்க பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பிட வசதிகள் செய்து தந்தும் அதற்கான கழிவுநீர் வெளியே செல்ல தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதும், கட்டப்பட்ட 10 கழிவறைகளை பூட்டி வைத்திருப்பதும் மத்திய அரசின் ராணுவத்துறையே பிரதமரின் செயலுக்கு எதிராக இருப்பதை காட்டுகிறது. எனவே மூடப்பட்ட கழிவறைகளை திறப்பதுடன், கழிவுநீர் செல்ல வசதியும் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்