தாம்பரம்,
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்பட சென்னை புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. தாம்பரம் மார்க்கெட் பகுதி சண்முகம் சாலை, பஸ் நிலைய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் குரோம்பேட்டைநாசர், காங்கிரஸ் நகர தலைவர் தீனதயாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, குரோம்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
குரோம்பேட்டை சிக்னல் அருகே குரோம்பேட்டை காமராஜ் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் இரு பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம் நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்திய பின்பு போக்குவரத்து சீரானது.
தாம்பரம் பஸ் நிலையம் அருகே தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், நகர காங்கிரஸ் தலைவர் விஜய்ஆனந்த், மனிதநேய மக்கள் கட்சி சலீம், முன்னாள் கவுன்சிலர்கள் இந்திரன், ஜோதிக்குமார், பெருங்களத்தூர் புகழேந்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆர்.கே.நகர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் ஏ.டி.மணி தலைமையில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே 150-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்து தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள வியாபாரிகள் சங்க மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பெரம்பூர் தொகுதி தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர்கள் ஜெயராமன், முருகன் தலைமையில் மாநில இளைஞரணி துணை அமைப்பு செயலாளர் ஆர்.டி.சேகர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அம்பேத்கர் கல்லூரி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அனைவரையும் எம்.கே.பி. நகர் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.
ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.
ஆவடி புதிய ராணுவ சாலையில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் நகர செயலாளர் ராஜேந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் ஆவடி போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர் தேரடி பகுதியில் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுக் குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், ஆசைத்தம்பி, இளவரசன், சரவணன் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள ஒரு பள்ளியில் தங்க வைத்தனர்.
மணலி மார்க்கெட் பகுதியில் தி.மு.க. மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஏ.வி.ஆறுமுகம், அவைத்தலைவர் துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சைதாப்பேட்டையில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ப.சுப்பிரமணி, வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.