சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக விலகலை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது.
அரசு என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பெரும்பாலான பொதுமக்கள் நோயின் தீவிரத்தை உணராமல் முக கவசம் அணியாமலும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கூட பின்பற்றாமலும் அலட்சியமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி கமிஷனர் வீட்டைவிட்டு வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இருந்தாலும், பொதுமக்கள் சிலர் முறையாக முககவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த புது முயற்சியாக சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையே சவாலுக்கு தயாரா என்ற தலைப்பில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து செல்பி எடுத்து முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களே பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் நிலையில் முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் முக கவசம் அணிந்து செல்பி எடுத்து we-a-r-a-m-as-k-c-h-a-l-l-e-n-ge என்ற ஹேஷ்டேக் உடன் சென்னை மாநகராட்சி முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தை பின்னூட்டம் செய்து முககவசம் அணிந்த புகைப்படத்தை பகிருமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.