பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஆதி சங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. மே 1-ந்தேதி மலை வழிபாடு, கண்ணாடி ரதத்தில் அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் அதிகாலை பெரியசாமி மலை வழிபாடும், மாலையில் பெருமாள் கோவிலில் இருந்து அம்பாளுக்கு திருமாங்கல்ய சீர்வரிசை எடுத்துவருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும், இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வீதிஉலாவும் நடந்தது.
தேரோட்டம்
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, இந்து சமய அறநிலையத்துறை முதல் நிலை ஒப்பந்ததாரர் கண்ணன், எக்செல் அக்ரோடெக் நிர்வாக இயக்குனர் சீத்தாபதி, மதுரகாளி அம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் ராஜேந்திரன் மற்றும் திருச்சி, நாமக்கல், ஆத்தூர், துறையூர், லால்குடி, அரியலூர், பெரம்பலூர் போன்ற நகரங்களில் இருந்தும், சிறுவாச்சூர் சுற்றுப்புறகிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியே சென்று மதியம் 2 மணி அளவில் கோவில் நிலையை அடைந்தது.
7-ந்தேதி மலை ஏற்றத்துடன் நிறைவு
தேரோட்டம் முடிந்தபிறகு சோலை முத்தையா வழிபாடும், மதியம் மதுரகாளி அம்மன் அன்னதான அறக்கட்டளை சார்பில் சிறப்பு அன்னதானமும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மேல் வாகன சத்தி ரத்தில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு ஊஞ்சல் வழிபாடும், நாளை (சனிக்கிழமை) விடையாற்றிவிழாவும், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் வீதி உலாவும் நடக்கிறது. 6-ந்தேதி கோவில் சிறப்பு நடை திறக்கப்படு கிறது. 7-ந்தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏற்றத்துடன் திருவிழா நிறைவு அடைகிறது.
சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையன் (அரியலூர்), கோவில் தக்கார் மற்றும் திருச்சி உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா மற்றும் கோவில் பணியாளர்கள், கோவில் பூசாரிகள் மற்றும் மதுரகாளி அம்மன் பக்தர்கள் செய்திருந்தனர்.