மாவட்ட செய்திகள்

ஏரல் அருகே இரு தரப்பினர் மோதல்; 5 வீடுகள் சூறை பொதுமக்கள் சாலை மறியல்

ஏரல் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 வீடுகள் சூறையாடப்பட்டன. பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

ஏரல்,

ஏரல் அருகே சூளைவாய்க்கால் கணபதியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் வேங்கையன். இவர் பஞ்சாயத்து தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சூசையப்பன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஊர் தலைவராக உள்ளார். ஊர் தலைவரை மாற்றுவது தொடர்பாக, இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இதுதொடர்பாக நேற்று மதியம் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கம்புகளாலும், கற்களாலும் தாக்கி கொண்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மேலும் 5 வீடுகள், ஒரு கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இதையடுத்து ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பஞ்சாயத்து தலைவர் வேங்கையன் உள்ளிட்ட சிலரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே பஞ்சாயத்து தலைவரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சூளைவாய்க்கால் கிராம மக்கள் மாலையில் ஏரல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ்குமார் (ஸ்ரீவைகுண்டம்), பாரத் (திருச்செந்தூர்) மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சூளைவாய்க்காலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து