தங்க கடத்தலில் அப்பாவிகள்
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறிப்பிட்ட அளவு தங்க நகைகளை அணிந்து வர அனுமதி உண்டு. அதற்கு அவர்கள் வெளிநாடு சென்று பணியில் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டில் குறைந்த பட்சம் 6 மாதங்களாவது தங்கியிருக்க வேண்டும்.
ஆனால் அந்த விதிகளை பின்பற்றாமல் வெளிநாடுகளில் இருந்து முறையான அனுமதியின்றி விமானத்தில் கடத்தி வரப்படும் தங்க கட்டிகளை விமான நிலையத்தில் சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்வார்கள். மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்கக (டி.ஆர்.ஐ.) அதிகாரிகள் விமான நிலையத்தில் அதிரடியாக புகுந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்வார்கள்.
அந்த வகையில் கோவை விமான நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அதிக அளவு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் சமீபகாலமாக தங்கம் கடத்தலில் அப்பாவிகள் அதிக அளவில் சிக்குவதாக திடுக்கிடும் தகவல் கிடைத்து உள்ளது.
இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. கொரோனாவின் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையும் உச்சத்தை தொட்டது.
விமான சேவைகள் இல்லாத போதும் கோவை விமான நிலையம் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு முந்தைய 2 ஆண்டுகளை விட அதிகமாக இருந்துள்ளது கடத்தல் தங்கம் பெரும்பாலும் உருமாற்றி கடத்தி வரப்படுகின்றன. ஸ்கேனர் மற்றும் மெட்டல் டிடெக்டரில் கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல்வேறு வேதிப்பொருட்களை கலந்து தங்க கட்டியையே பசையாக்கி கடத்தி வருகின்றனர்.
21 பேர் கைது
கோவை விமான நிலையம் வழியாக கடந்த 2018-ம் ஆண்டு ரூ.4 கோடியே 96 லட்சம் மதிப்புள்ள 15 கிலோ 384 கிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டது. இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
2019-ம் ஆண்டு ரூ.4 கோடியே 43 லட்சம் மதிப்புள்ள 11 கிலோ 212 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2020-ம் ஆண்டு ரூ.8 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள 16 கிலோ 489 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 21 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2018-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டு ஒரு கிலோ தங்கம் தான் அதிகம் கடத்தி வரப்பட்டது. கொரோனா தாக்கத்தால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்ததால் மதிப்பு இரு மடங்கு கூடியது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளன. அதை கடத்துபவர்களை குருவி என்ற பெயரில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அனுப்புகின்றனர்.
பண ஆசை காட்டினர்
கடந்த ஆண்டு (2020) கோவை விமான நிலையம் வழியாக தங்கம் கடத்திய 21 பேர் கைதானார்கள். இதில் 15 பேர் தங்கம் கடத்தல் பற்றி தெரியாத அப்பாவிகள் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் பரவியதால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் சர்வதேச விமான சேவையை நிறுத்தின.
இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா, உறவினர்களை பார்க்க சென்றவர்கள், படிக்க, வேலை பார்க்க சென்றவர்கள் என பல தரப்பினரும் அந்தந்த நாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களால் தாய் நாடு திரும்பி வரமுடியவில்லை. மேலும் அங்கு வேலை இல்லாததால் வருமானம் இன்றி தவித்தனர். அதை பயன்படுத்திய தங்க கடத்தல் கும்பல் அவர்களை பண ஆசை காட்டி தங்களது வலையில் விழ வைத்து உள்ளனர்.
கடத்தல் கும்பல்
கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நேரத்தில், வெளிநாடுகளில் சிக்கிய வர்களை மீட்க ஒருசில சிறப்பு விமானங்கள் கோவைக்கு இயக்கப்பட் டன. அதில் வந்த அப்பாவி தொழிலாளர்களை கடத்தல் கும்பல் தங்க கடத்தலுக்கு பயன்படுத்திக் கொண்டது. அப்போது அந்த அப்பாவிகளுக்கு தேவையான பணம் மற்றும் பல மடங்கு கூடுதலாக இருந்த விமான கட்டணத்தையும் கொடுத்து தங்ககடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
தீபாவளி அன்று அதிகாரிகள் போதிய அளவில் பணியில் இருக்க மாட்டார்கள் என கருதி விமானத்தில் கோவைக்கு சிலர் தங்கம் கடத்தி வந்தனர். அவர்களை மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் கண்டறிந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். கொரோனா பாதிப்பு காலத்தில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் கடத்தப்பட்டது. அதில் கடத்தல் கும்பலின் ஆசைவார்த்தையில் மயங்கி, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்த அப்பாவிகள் அதிகம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.