நெல்லை,
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நெல்லை வழியாக கன்னியாகுமரி-சென்னை சிறப்பு ரெயில் மற்றும் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2-ந் தேதி நெல்லையில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அதேபோல் நேற்று முன்தினம் செங்கோட்டை சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டது. அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி அனைத்து ரெயில்களையும் படிப்படியாக இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.
கொல்லம் சிறப்பு ரெயில்
சென்னையில் இருந்து கொல்லம் வரை செல்லும் சிறப்பு ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று காலை 7.20 மணிக்கு நெல்லை சந்திப்பு 2-வது பிளாட்பாரத்தை வந்து அடைந்தது.
ரெயில் பெட்டியில் இருந்து பயணிகள் இறங்கி சமூக இடைவெளியுடன் வரிசையாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியே சென்றனர். ரெயில் 10 நிமிடம் நின்றுவிட்டு கொல்லம் நோக்கி புறப்பட்டு சென்றது.