சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், அங்காடிகள் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக வணிகர்களுடன் மாநகராட்சி மற்றும் போலீசார் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று வணிக வளாகங்கள் அமைந்துள்ள தியாகராயநகர் மற்றும் பாடி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து மாநகராட்சி மற்றும் போலீசார் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது மேற்கண்ட 2 பகுதிகளிலும் 26 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்திற்காகவும், முககவசம் அணியாத நபர்களிடமிருந்தும் நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 6,130 நிறுவனங்களிடம் இருந்தும் மற்றும் 30,755 தனிநபர்களிடம் இருந்தும் ரூ.3 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரத்து 790 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 1,613 மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 39 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.