தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோட்டூர்மலை, ஏரிமலை, அலக்கட்டு ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளன. அடிவார பகுதிகளில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த மலை கிராமங்களில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரேஷன் பொருட்கள், அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் ஆகியவை கழுதைகள் மூலமாக மலைப்பாதை வழியாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே இந்த மலை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட உள்ள அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை சாக்குப் பைகள் மற்றும் அட்டை பெட்டிகளில் அடைத்து கழுதைகள் மீது வைத்து மலைப்பாதையில் கொண்டு செல்லப்பட்டன.
இதுதொடர்பாக இந்த மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், முறையான சாலை வசதி இல்லாததால் நாங்கள் வசிக்கும் மலை கிராமங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விரைவாக எடுத்து வர முடியாத சூழல் நீண்டகாலமாக தொடர்கிறது. எனவே மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.