புதுச்சேரி,
வங்கக் கடலில் உருவான, நிவர் புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த புயல் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று சுமார் 145 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடலோர பகுதி முழுவதும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக மத்திய கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து, மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உணவு, தண்ணீர், முக கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.