மாவட்ட செய்திகள்

சிவகளையில் பழங்கால நெல்மணி, மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

சிவகளை அகழாய்வில் பழங்கால நெல்மணிகள், மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தினத்தந்தி

ஏரல்,

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை அதிகாரிகள் சிவானந்தன், பிரபாகர், தங்கத்துரை ஆகியோர் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதிச்சநல்லூர் பரும்பு, சிவகளை பரும்பு ஆகிய இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெறுகிறது. இதில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிவகளை பரும்பு பகுதியில் 23 இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டதில், 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பழங்கால நெல்மணிகள்

தொடர்ந்து அந்த முதுமக்கள் தாழிகளை திறந்து, அவற்றில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யும் பணி கடந்த 17-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு முதுமக்கள் தாழியாக தொல்லியல் துறையினர் திறந்து ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று வரையிலும் 10 முதுமக்கள் தாழிகளை திறந்து, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

இதில் மண்பாண்ட கிண்ணங்கள், குவளைகள், பழங்கால நெல்மணிகள், அரிசி, சாம்பல், மனிதர்களின் பல் தாடை எலும்புகள், பற்கள் போன்றவை இருந்தன. அவைகள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றும், அவற்றை ஆய்வக பரிசோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு செல்வதாகவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழ்விடம் கண்டறிய...

மேலும் அகழாய்வில் கிடைத்த மனிதர்களின் பல் தாடை எலும்புகள், பற்கள் போன்றவற்றை மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் பழங்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் மரபினர் தற்போது எந்த பகுதியில் வசித்து வருகின்றனர்? என்பது கண்டறியப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மற்ற முதுமக்கள் தாழிகளையும் திறந்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பழங்கால மக்கள் வசித்த வாழ்விடத்தை கண்டறிவதற்காக, சிவகளை வலப்பான்பிள்ளை திரடு பகுதியிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை