ஈரோடு,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மதுராந்தகத்தில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் உள்பட தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 8 இடங்களில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே ஈரோடு -சத்தி ரோட்டில் நடந்த போராட்டத்துக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சுப்பிரமணி, இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஈ.பி.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சித்திக், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநகர செயலாளர் சாஜிக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.எம்.துளசிமணி, முன்னாள் கவுன்சிலர் பொன்பூபதி உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மு.க.ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், முருகையன் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்தனர். 8 பெண்கள் உள்பட மொத்தம் 123 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஈரோடு-சத்தி ரோட்டில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் கோபியில் 25 பேரும், அந்தியூரில் 26 பேரும், சென்னிமலையில் 43 பேரும், பவானியில் 38 பேரும், கவுந்தப்பாடியில் 50 பேரும், அம்மாபேட்டையில் 25 பேரும் என ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 பெண்கள் உள்பட 330 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.