விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா புளிச்சப்பள்ளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 67). தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த 13.5.1996-ம் ஆண்டு முதல் 13.5.2001 வரை வானூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
அந்த காலத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாரிமுத்து வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தி 131 முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மாரிமுத்து, வருமானத்திற்கு அதிகமாக ரூ.16 லட்சத்து 88 ஆயிரத்து 951 அளவில் சொத்து சேர்த்து வைத்தது தெரியவந்தது. இந்த சொத்துக்கள் மாரிமுத்துவின் மனைவி துளசியம்மாள் (60), மகன் பிரகாஷ் (35) ஆகியோரது பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாரிமுத்து, துளசியம்மாள், பிரகாஷ் ஆகியோர் மீது கடந்த 31.3.2004 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் இதுதொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன் பிறகு இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 60 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதி பிரியா தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, துளசியம்மாள், பிரகாஷ் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி பிரியா தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜகுமாரி ஆஜராகி வாதாடினார்.